முந்தைய ஒப்பந்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் மிகவும் இறுதி கட்டத்தில் உள்ளன என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான சூழல்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் சவால்கள் நிலவி வந்தன. இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்தக் கடந்த ஆண்டிலிருந்து தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு வருகை தந்தார். அப்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது எரிசக்தி பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

முந்தைய ஒப்பந்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் மிகவும் இறுதி கட்டத்தில் உள்ளன.இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது; நாங்களும் அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவிற்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழலில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.