தாராபுரம் இடைத்தேர்தலின் போது காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் தொடர்பாகக் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வீராச்சிமங்கலம் பகுதியில் அவர் வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா தனது தொண்டர்களுடன் வாகன பேரணியாக வந்தார்.

பாதுகாப்பு கருதி அவர்களை மாற்று வழியில் செல்லுமாறு அங்குப் பணியில் இருந்த போலீசார் அறிவுறுத்தினர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்ட விவகாரத்தில், கார்த்திகா தலைமையில் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாகவும் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்தில் வைத்து இன்று (அக்.20) காவல் துறையினர் அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட கார்த்திகா உட்பட 6 பேரையும் போலீசார் தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நடந்து முடிந்த தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.