இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மீது அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு இணையவழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சுமார் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு 'டார்க் வெப்'பில் வெளியிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சிரியூசிம்' என்ற பெயரில் செயல்படும் ஹேக்கர் குழு, எஸ்பிஐ வங்கியுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், கடன் விண்ணப்பங்கள் மற்றும் கணக்குத் தொடக்க ஆவணங்கள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைத் திருடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சைபர் பாதுகாப்புச் செய்திகளை வெளியிடும் 'சைபர்பல்ஸ்' தளத்தின்படி, எஸ்பிஐ-யின் சுமார் 3.80 லட்சம் தரவுப் பதிவுகள் சிஎஸ்வி (CSV) வடிவத்திலும், 2,722 கோப்புகள் பிடிஎஃப் (PDF) வடிவத்திலும் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை உறுதிசெய்து பங்குச்சந்தைக்கு எஸ்பிஐ நிர்வாகம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் "கடந்த அக்டோபர் 16, 2026 அன்று வாடிக்கையாளர் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் எனப் பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் CERT-In ஆகியவற்றிடமிருந்து எச்சரிக்கை கிடைத்தது. முதல்கட்ட பகுப்பாய்வில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் கைபேசி எண்கள், பிறந்த தேதி, பெயர், மின்னஞ்சல், முகவரி, கிளை விவரங்கள் மற்றும் கடன் விண்ணப்பங்கள் அடங்கும்.

தரவுக் கசிவின் அளவை மதிப்பிடவும் ஆபத்துகளைக் கண்டறியவும் உடனடியாக சைபர் தடுப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலால் வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதிச் செயல்பாடு அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. வங்கியின் சேவைகள் எந்தவித இடையூறும் இன்றி இயல்பாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.