குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வீடியோ எடுக்க வந்த நபரின் காரை உடைத்து ரூ. 6½ லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ்களைத் திருடிய 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 6.52 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து கேமரா மற்றும் அதன் பாகங்களைத் திருடிய 4 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 6.52 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தரணிதரன் (31) என்பவர் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை வீடியோ எடுப்பதற்காகக் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி குலசேகரன்பட்டினம் வந்துள்ளார். அவர் குலசை - மணப்பாடு ECR சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் தனது காரை நிறுத்தி, அதனுள் கேமரா மற்றும் லென்ஸ் போன்ற உபகரணங்களை வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளிருந்த கேமரா பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தரணிதரன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சியைச் சேர்ந்த அபுதாஹிர் மகன் சித்திக் (43), ராமலிங்கம் மகன் தனபால் (51), கோவிந்த் மகன் விக்கி (எ) நடராஜன் (30) மற்றும் சேகர் மகன் பிரபாகரன் (45) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூபாய் 6,52,000/- மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ் உபகரணங்களை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

