கோயம்புத்தூர், சரவணம்பட்டி கவமனை மில்லினியம் நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாஸ் மகன் தரணிதரன்(31). இவர் தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார். தான் வந்த காரை பைபாஸ் ரோடு யாக்கோபு உணவகம் அருகே நிறுத்திவிட்டு கோவிலுக்குச் சென்றுள்ளார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரின் இடது பக்க பின்பகுதி கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், காரில் வைத்திருந்த கேமரா மற்றும் மைக் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர் குலசை தசரா திருவிழாவிற்கு வந்தபோது, அவரது கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகை, லேப்டாப்பை திருடிச் சென்றனர். தற்போது மீண்டும் கார் கண்ணாடியை உடைத்து திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

