குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவைக் காண வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியரின் காரின் கண்ணாடியை உடைத்து, 10 பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், டென்நேரு காஞ்சிபாடு பகுதியைச் சேர்ந்த ரவிசந்த் என்பவரது மகள் சாய் பிரியங்கா (26). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு வந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் கருங்காலி அம்மன் கோவில் தெரு அருகே உள்ள ஆரம்பப் பள்ளி அருகில் தனது காரை நிறுத்திவிட்டு முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு 9.00 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் காரில் இருந்த, 2 தங்க சங்கிலிகள், 2 ஜோடி வளையல்கள், 1 ஜோடி கம்மல் உள்ளிட்ட மொத்தம் 10 பவுன் நகைகள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாய் பிரியங்கா குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் நேரில் வந்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.