திருநெல்வேலி டவுன் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (58). இவர் அப்பகுதியில் உள்ள வாகையடி அம்மன் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று இரவு கோயிலில் விஜயதசமி சிறப்புப் பூஜை நடைபெற்றதால், நடராஜன் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 11 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 11 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடராஜன் உடனடியாக நெல்லை டவுன் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைப் பதிவுகள் சேகரிக்கப்பட்டன.
ஏற்கெனவே கடந்த மாதத்தில் இதேபோல் ரத வீதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ரத வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் இச்சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

