தூத்துக்குடி மாநகரில் இன்று மாலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பயங்கர இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு தெருக்களிலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை நீர் அனைத்தும் மழைநீருடன் கலந்து சாலைகளில் ஓடியதால் கடும் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்ண்டானது. மேலும், வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கொண்டதால் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது.
இதனைக் கண்ட தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டு திமுக கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சிலின் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். மாநகராட்சி ஊழியர்கள் வந்து தகவலைத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்குள் தாமதமாகும் என்பதாலும், தனது வார்டு மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் அவர் தாமதிக்கவில்லை.
தலையில் ஒரு கேரி பேக் மட்டும் கட்டிக் கொண்டு, தன் இருசக்கர வாகனத்தில் மண்வெட்டியுடன் வந்த அவர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கைகளில் கையுறை கூட அணியாமல் நேராகச் சாக்கடைக்குள் கையைவிட்டு அடைப்புகளை நீக்கினார். ஆங்காங்கே தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மழைநீர் உடனடியாக வடிந்து செல்ல வழிவகை செய்தார்.
கவுன்சிலரே ஒரு தூய்மைப் பணியாளரைப் போல் தாமாக முன்வந்து கொட்டும் மழையில் இறங்கி சாக்கடை அடைப்பைச் சரிசெய்த காட்சியை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். துரிதமாகச் செயல்பட்டு மக்கள் துயர் துடைக்க முயன்ற கவுன்சிலரின் இந்தச் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

