தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-ஆல் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் உள்ள கிளை, வார்டு, பேரூர் மற்றும் ஒன்றிய அளவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவு திருவுருவ சிலைக்கும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையிலும், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஏற்பாட்டிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் நகர செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆனந்த், அதிமுக நிர்வாகிகள் கண்ணன், சண்முகசாமி மற்றும் மகளிர் அணி சாந்தி, ஆறுமுகத்தாய், குமாரதாய் உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

