தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த போதிலும், விதிகளை மீறி சில தனியார் பள்ளிகள் இயங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகளை இயக்கக் கூடாது என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று (அக்.22) பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த விடுமுறை அறிவிப்பை மீறி, கோவில்பட்டி பகுதியில் உள்ள சில பள்ளிகளில்வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வரவழைத்துத் தொட, பள்ளிகள் வகுப்புகளை நடத்தி வருவதாகப் பெற்றோர்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களிடம் தொலைபேசி மூலமாகவும் நேரில் சென்றும் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, "அமைச்சர் அறிக்கையை நாங்கள் மதிப்பதில்லை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. திட்டமிட்டபடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்" என்று பள்ளி நிர்வாகங்கள் மிகவும் அலட்சியமாகவும் திமிர்த்தனமாகவும் பதிலளித்ததாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திவிட்டு, அரசின் உத்தரவுகளையும் மீறிச் செயல்படும் இதுபோன்ற பள்ளிகள் மீது மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.