கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் மற்றும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண் ராஜ் ஆகியோர் இணைந்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அரசுச் செயலாளர் மரு. தாரேஸ் அகமது மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவரும் மக்கள் நல்வாழ்வுத்துறைத் துணைச் செயலாளருமான ரா. அழகுமீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு மருத்துவச் சேவைகளைப் பொதுமக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நலம் AI’ (Nalam AI) வாட்ஸ்அப் வழிச் சேவை குறித்து அமைச்சர்கள் விரிவாக விளக்கினர்: பொதுமக்கள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 9619222999 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெறலாம்.
புதிய நோயாளிகள் பதிவு, புறநோயாளிகள் (OP) முன்பதிவு, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகளை டிஜிட்டல் முறையில் கைபேசியிலேயே பெற முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இச்சேவை கிடைக்கும்.
மருத்துவமனை வெளிநோயாளிகள் பதிவு மையம், இரத்த மாதிரி சேகரிக்கும் இடம் மற்றும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் செயல்படும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் 'பாதம் பாதுகாப்போம்' பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
மேலும், மகளிர் நலச் சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளின் விவரங்களைச் சுகாதார மேலாண்மை தகவல் அலகில் (HMIS) உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வைத் தொடர்ந்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் மருத்துவமனையில் பிறந்த 7 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு அமைச்சர்கள் தங்க மோதிரங்களை அணிவித்தனர். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 22 பெண் குழந்தைகளுக்குச் சிறப்புப் பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், மாதவன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

