ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மாவின் அருட்பேரொளி ஆராதனை பெருவிழாவில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பங்காரு அம்மா திருப்பாதுகைகளுக்கு பூஜை செய்து வணங்கினார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மாவின் அருட்பேரொளி ஆராதனை பெருவிழா கடந்த 2 தினங்களாக கோலாகலமாக நடந்தது. நிகழ்வை முன்னிட்டு, சித்தர் பீடம் முழுவதும் வாழை, மலர்கள், வண்ண தோரணங்கள், மின்விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த அருட்பேரொளி ஆராதனை பெருவிழா கடந்த 18ம் தேதி மாலை 4 மணிக்கு கலச, விளக்கு, வேள்வி பூஜையுடன் தொடங்கியது. இதில், வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.

காலை 6 மணிக்கு பக்தர்களுக்கான அருள் தரிசனம் தொடங்கியது. காலை 7 மணிக்கு சிறப்பு அன்னதானம் தொடங்கியது. பின்னர், காலை 10 மணிக்கு குரு பீடத்தில் உள்ள பங்காரு அடிகளார் உருவச்சிலை மற்றும் திருப்பாதுகைகளுக்கு பக்தர்கள் சீர்வரிசையுடன் சென்று ஆசி பெற்றனர்.

காலை 10.15க்கு சித்தர் பீடம் சென்ற ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குரு பீடத்திலுள்ள பங்காரு சித்தரின் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தார். மேலும் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை செய்தார்.

தொடர்ந்து தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்குமார், சாத்துகுமார், எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், இயாகராஜன், ஹரிஷ், விஜயராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, தவெக மாவட்ட செயலாளர்கள் குமரவேல், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பங்காரு சித்தரின் சிலைக்கு பூஜை செய்து வணங்கினர். மாலை 6 மணிக்கு சித்தர் பீட வளாகத்தில் தங்கத் தேர் பவனி நடந்தது.

நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், ஸ்ரீதேவி ரமேஷ், உமா தேவி ஜெயகணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரமேஷ், தலைமை நிர்வாக அதிகாரி அகத்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல மாவட்டம், வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று, ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களின் திரு உருவச்சிலையை வணங்கினர். நிகழ்ச்சியை கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.