தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தனராஜ் (34) மற்றும் ஜான்சன் (31). த.வெ.க. பிரமுகர்களான இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, சந்தனராஜும், ஜான்சனும் அவரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்தச் சிறுமியின் தந்தை குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய அவர்கள், சிறுமிக்கு நேரடியாகக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, உடனடியாக வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சந்தனராஜ் மற்றும் ஜான்சன் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

