» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை தமிழக அரசு வழங்க வேண்டும்: கமல்ஹாசன்

செவ்வாய் 26, அக்டோபர் 2021 5:02:29 PM (IST)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களுக்கு தி.மு.க 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் இன்றுவரை நிறைவேற்றப்படாத மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை இப்போது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் 491-வது வாக்குறுதி, ‘திட்டங்கள் செயலாக்கம் என்கிற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும்’ எனச் சொல்கிறது.

அதன் விவரம் வருமாறு:- ‘திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் எனும் பெயரில் ஒரு புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டு, மூத்த அமைச்சரின் பொறுப்பில் இருக்கும். இந்த அமைச்சகத்துக்கு கீழ்க்காணும் அலுவல்கள் பொறுப்பாக்கப்படும். மாநிலத் திட்டக்குழு இந்த அமைச்சகத்தின்கீழ் இயங்கும். மேலும், இந்தத் தேர்தல் அறிக்கையில் உள்ள கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள் மற்றும் செயல் அம்சங்கள் மீதான இலக்குகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதை இந்த அமைச்சகம் கண்காணித்து நிறைவேற்றும்.

தேர்தல் நேரத்தில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை 100 நாட்களுக்குள் எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவதைக் கண்காணிக்கும். அரசு பதவியேற்ற 100-வது நாளன்று, முதல்வர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து, இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பார்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் பணி நாளன்றும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை முதல்வர் மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து தலைவர் தளபதி கலைஞர் அரசின் சாதனை அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) ஊடகங்களுக்கு வழங்குவார்.’ இவ்வாறு சொல்கிறது அந்த வாக்குறுதி.

தி.மு.க அரசு பதவியேற்று இன்றுடன் 173 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊடகச் சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புக் கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஆனால், ‘திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும் மற்றும் மாதந்தோறும் ஊடகங்களிடம் ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

வரும் நவம்பர் 1-ந்தேதி திங்கட்கிழமை மாதத்தின் முதல் பணி நாளாகவே அமைகிறது. அந்த நாளுக்கு வேறொரு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. அந்நாளில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்தச் சிறப்புமிக்க நாளில் இருந்து, மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam







Thoothukudi Business Directory