» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பார்வையிட்ட பழங்குடி மாணவர்கள்

வெள்ளி 20, ஆகஸ்ட் 2021 4:13:41 PM (IST)


தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பழங்குடி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். 

வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும், அவர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் முதற்கட்டமாக மைலாறு, சேர்வலாறு, அகஸ்தியர் குடியிருப்பு காணி பழங்குடி மக்களை சீருடைப் பணி, வனப்பணி உள்ளிட்ட பிற அரசு பணிகளிலும், வங்கிப் பணி போன்ற இதரப் பணிகளில் சேர்க்கும் பொருட்டு இலவச பயிற்சி வகுப்புகள் முண்டந்துறை வன அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டு ஊக்கம் பெறவும் தன்னம்பிக்கை வளர்த்து கொள்ளவும் அரசு அலுவலக செயல்பாடுகள், அதன் பணி இயல்பு போன்றவற்றை கண்டுணர்ந்து அப்பணியில் சேர ஆர்வத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டதின் அடிப்படையில் இம்மாணவர்களை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கும் தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்களுக்கும் அழைத்து சென்று அதன் செயல்பாடுகளை அறிய ஊக்குவிக்குமாறும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணி பழங்குடி மாணவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 12.08.2021 அன்று அழைத்து செல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக காணி பழங்குடி மாணவர்கள் தூத்துக்குடி போர்ட் டிரஸ்டிற்கு 19.08.2021 அன்று அழைத்து செல்லப்பட்டனர். இதற்கான இலவச பேருந்து வசதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மாணவர்கள் காணி பழங்குடியிருப்பு பகுதியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு தூத்துக்குடி போர்ட் டிரஸ்டிற்கு வந்தடைந்தனர். இங்கு மாணவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுமான துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து துறைமுக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து இரண்டு சிறிய கப்பல்களில் மாணவர்கள் பயணம் செய்தனர். 

இந்நிகழ்ச்சியில் 23 மாணவிகள் உட்பட 32 மாணவ மாணவியர் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கள் முதல் முறையாக கடலை கண்டதாகவும் கப்பல் பயணம் தங்களுக்கு முதல் முறை எனவும், இப்பயணம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவை தந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அவர்களுக்கு தாங்கள் நன்றிகடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகளுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறினர். 

தூத்துக்குடி துறைமுக வளாகத்திற்குள் சுற்றி பார்ப்பதற்கும் மதிய உணவு போன்றவற்றிற்கும் தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன்.பிரவீன்குமார் சிங், துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.சசிராஜ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் அ.ஜோதிமணி மற்றும் உதவி இயக்குநர் ம.மரிய சகாய ஆன்டனி, வனத்துறை அதிகாரிகள் எஸ்.மோகன்தாஸ், அ.அப்துல் ரகுமான், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory