» சினிமா » செய்திகள்

குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருக்குமான படம் பொன்னியின் செல்வன்: எழுத்தாளர் ஜெயமோகன்

புதன் 8, ஜூன் 2022 3:39:49 PM (IST)



குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருக்குமான படம் பொன்னியின் செல்வன் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.  

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளதாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன், தனது வலைத்தளத்தில் எழுதியதாவது: பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி, இது பொன்னியின் செல்வன் நேரடியாகவே அந்நாவலின் கதையும் களமும் கொண்டதா, அல்லது ராவணன் போல அக்கருவை மட்டும் எடுத்தாள்வதா? அந்நாவலின் நேரடியான திரைவடிவம்தான். அதே சோழர்காலக் களம், அதே கதாபாத்திரங்கள், அதே கதையோட்டம். அதே நாவல்தான். பெரும்பாலானவர்களின் அடுத்தக் கேள்வி, படம் எப்படி வந்திருக்கிறது?

நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. நவீன திரைப்படமாக்கலை அறிந்தவர்களுக்கு அது ஏன் என தெரியும். இப்போது படம் பல துண்டுகளாக இருக்கிறது. ஒருபக்கம் வரைகலை வேலை செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் காட்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இப்போது சினிமா, இயக்குநரின் கற்பனையிலேயே இருக்கிறது. அதை வேறு எவரும் இப்போது திரைப்படமாகப் பார்க்க முடியாது.

ஆனால் துளிக்காட்சிகளாகப் படத்தைப் பார்த்தவர்கள் ஒரு கலகலப்பான, பிரம்மாண்டமான காட்சிவெளிகொண்ட படமாக உள்ளது என்றார்கள்.வழக்கமான வரலாற்றுப் படங்களில் இருக்கும் இரண்டு அம்சங்கள் பொன்னியின் செல்வனில் இல்லை. ஏனென்றால் மூலக்கதையிலேயே அவை இல்லை. ஆகவேதான் அந்நாவல் இன்றும் ஒரு ‘பாப்புலர் கிளாஸிக்’ ஆக நீடிக்கிறது. ஒன்று, அதில் எதிர்மறைப் பண்புகள் இல்லை. வரலாற்று நாவல்களிலும் சினிமாக்களிலும் வரும் 

பெரும் சதிகாரர்கள், கொலைகாரர்கள், தீயவர்கள் இல்லை. அதன் ‘வில்லன்’ என்றால் பெரிய பழுவேட்டரையர். ஆனால் அவர் மிக நல்லவர். பாண்டிய ஆபத்துதவிகள் கூட கடமையுணர்வும் நாட்டுப்பற்றும் கொண்டவர்கள்தான். இரண்டு, அதில் போர்வெறியும் அதன் விளைவான உச்சகட்ட வன்முறையும் இல்லை. வீரம், தியாகம் என்னும் பெயர்களில் வரலாற்றுப்படங்கள் வன்முறையை காட்சி வடிவில் நிறைக்கின்றன. அந்த அம்சம் இப்படத்தில் இல்லை. ஆகவே குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருக்குமான படம் பொன்னியின் செல்வன் என்று எழுதியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory