» சினிமா » செய்திகள்

கேரள இலக்கிய விருதை திருப்பி அளிக்கிறேன்: கவிஞர் வைரமுத்து அறிவிப்பு

ஞாயிறு 30, மே 2021 9:15:51 AM (IST)

கேரளாவின் ஓ.என்.வி. இலக்கிய விருதை திருப்பி அளிக்கிறேன்’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி. கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். 

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி. குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிப்பை திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ.3 லட்சத்தைக் கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன். மலையாள மண் மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூ.2 லட்சத்தை கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும். மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory