» சினிமா » செய்திகள்

நடிகர் பாண்டு மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்

வியாழன் 6, மே 2021 12:29:55 PM (IST)

நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான  பாண்டு கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் பாண்டு. 

நகைச்சுவையில் தனக்கெனத் தனி பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பாகும். பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல் 

பாண்டு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியக் கலைஞருமான நடிகர் பாண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,

நடிகர் பாண்டு தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கும், ஓவியக் கலைஞர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory