» சினிமா » செய்திகள்

பிரபல திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீர் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

வெள்ளி 30, ஏப்ரல் 2021 10:29:50 AM (IST)

பிரபல  திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த் (54) மாரடைப்பால் இன்று காலமானார். கரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே.வி. ஆனந்த் வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி. ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாளப் படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். காதல் தேசம் படம் மூலமாகத் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார்.

பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க கணா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மாரடைப்பால் திரையுலகில் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமை மறைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த் இரங்கல் 

சிவாஜி படத்தில் கே.வி. ஆனந்துடன் பணியாற்றிய ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார். 

கமல்ஹாசன் 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி" என்று தெரிவித்துள்ளார்.

மோகன்லால் 

நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் "அவர் நம் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். ஆனால் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். கே.வி.ஆனந்த் சார் நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள். அவரது ஆன்மாவுக்கு எனது பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைந்துவிட்டார் என்ற துக்க செய்தியுடன் கண் விழிக்க நேரந்தது. அற்புதமான ஒளிப்பதிவாளர், புத்திசாலித்தனமான இயக்குநர், அருமையான மனிதர். சார், நீங்கள் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் சார்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory