» சினிமா » செய்திகள்

அமெரிக்காவில் 93-வது விருது வழங்கும் விழா: நோமேட்லேண்ட் 3 விருதுகளை வென்றது

செவ்வாய் 27, ஏப்ரல் 2021 8:38:00 AM (IST)அமெரிக்காவில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நோமேட்லேண்ட் படம் 3 விருதுகளை வென்றது. சிறந்த இயக்குனர் விருதை சீன பெண் இயக்குனர் பெற்றார்.

உலக அளவில் கவுரவத்துக்குரிய சினிமா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, ஆண்டுதோறும் அமெரிக்காவில் பிப்ரவரி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் விழா தள்ளிவைக்கப்பட்டு, நேற்று நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டருக்கு பதிலாக, யூனியன் ஸ்டேசனில் விழா நடத்தப்பட்டது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமூக இடைவெளி கண்டிப்புடன் பின்பற்றப்பட்டது. விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டதில் இருந்தே நோேமட்லேண்ட் படம் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. நேற்றைய விழாவில், இப்படம் 3 விருதுகளை பெற்றது. சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகை விருது, இப்படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்டுக்கு வழங்கப்பட்டது. இது, இவர் பெறும் 3-வது ஆஸ்கர் விருதாகும். இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவரே ஆவார்.

சிறந்த இயக்குனர் விருதை நோமேட்லேண்ட் படத்தை இயக்கிய சீன பெண் இயக்குனர் குளோயி ஜாவோ பெற்றார். 39 வயதான இவர், தனது பதின்ம வயதில் அமெரிக்காவில் குடியேறினார். சிறந்த இயக்குனர் விருது பெறும் 2-வது பெண் குளோயி ஜாவோ ஆவார். சிறந்த நடிகர் விருது, தி பாதர் படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் அந்தோணி ஹாப்கின்சுக்கு வழங்கப்பட்டது. விழாவில் அவர் பங்கேற்கவில்லை.

சிறந்த துணை நடிகர் விருது, ஜூதாஸ் அண்ட் தி பிளாக் மெசியா படத்தில் நடித்ததற்காக டேனியல் கலுயாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகை விருதை மினாரி படத்தில் நடித்ததற்காக தென்கொரிய நடிகை யு ஜங் யோன் பெற்றார். அவருக்கு வயது 73. அந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான நடிகர் பிராட் பிட் இவ்விருதை அவருக்கு வழங்கினார்.

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது, டென்மார்க் நாட்டை சேர்ந்த அனதர் ரவுண்ட் என்ற படத்துக்கு வழங்கப்பட்டது. மற்ற விருதுகள் வருமாறு:-

ஒப்பனை, சிகை அலங்காரம்:- மியா நீல், ஜமிகா வில்சன்(மா ரைனிஸ் பிளாக் பாட்டம்)

ஆடை அலங்காரம்:- அன் ரோத்.

திரைக்கதை:- எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் உமன்)

அனிமேஷன் படம்:- சோல்

விஷுவல் எபெக்ட்:- டெனட்

ஒளிப்பதிவு :- மங்க்

லைவ் ஆக்ஷன் குறும்படம்:- டூ பெர்பெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

ஆவணப்படம்:- மை ஆக்டோபஸ் டீச்சர்.

மை ஆக்டோபஸ் டீச்சர் படத்தை தயாரித்தவர் கிரெய்க் பாஸ்டர். அவருடைய மனைவியான சுவாதி தியாகராஜன் இந்தியாவை சேர்ந்தவர். அவர் இந்த படத்தின் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி உள்ளார். விழாவில், இன் மெமோரியம் பிரிவில், இந்தி நடிகர் இர்பான் கான், இந்திய ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory