» சினிமா » செய்திகள்

அக்டோபருக்குள் இந்தியன் 2 படத்தை முடித்து தர முயற்சிப்பேன்: இயக்குநர் ஷங்கர் தகவல்

வியாழன் 22, ஏப்ரல் 2021 4:04:51 PM (IST)

அக்டோபருக்குள் இந்தியன் 2 படத்தை முடித்து தர முயற்சிப்பதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 2019ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், இந்தியன் 2 படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும் கூறியது.

மேலும் இவ்வளவு செலவு செய்தும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தரது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இயக்குநர் ஷங்கர், ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஃப்ரீயாக இருப்பதால் இந்தியன் 2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிக்கிறேன்.

நடிகர் விவேக் மறைவால் அவர் நடித்த காட்சிகளை வேறு நடிகரை வைத்து எடுக்க வேண்டியுள்ளது என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீதிமன்ற தலையீட்டால் இந்தியன் 2 படப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. லைகா நிறுவனமும் ஷங்கரும் கலந்து பேசி படப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என அறிவுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory