» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியா!
சனி 30, செப்டம்பர் 2023 5:10:17 PM (IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் ஸ்குவாஷ் ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 8-வது நாளான இன்று ஸ்குவாஷ் ஆடவர் அணிப்பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் சௌரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றனர்.
இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரோகன் போபன்னா, ருதுஜா போஸ்லே இணை 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்துடன் 8-வது நாளான இன்று வரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி 13 வெண்கலம் என 36 பதக்கங்களை வென்றுள்ளது.