» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஹென்றிக் கிளாசனின் அதிரடி : தென் ஆப்பிரிக்கா அணி உலக சாதனை!
சனி 16, செப்டம்பர் 2023 5:26:41 PM (IST)

செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 164 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா.
இதில் தென் ஆப்பிரிக்கா 416 ரன்களைக் குவிக்க ஆஸ்திரேலியா 252 ரன்களுக்கு 34.5 ஓவர்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக் கிளாசன் 83 பந்துகளில் 13 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 174 ரன்களை விளாசித்தள்ளினார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 82 ரன்களை நொறுக்கினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இப்போது 2-2 என்று சமநிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் 92 பந்துகளில் 222 ரன்களைச் சேர்த்தனர். இதில் பயங்கரம் என்னவெனில் 25 ஓவர்களில் 120/2 என்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஹென்றிக் கிளாசனின், டேவிட் மில்லர் வெறியாட்டத்தில் கடைசி 25 ஓவர்களில் 296 ரன்கள் அதாவது கடைசி 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 300 ரன்கள் பக்கம் விளாசியது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஒரு ‘நைட் மேர்’ அனுபவம்.
5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி கபில்தேவ் தான் 1983 உலகக்கோப்பையில் 175 ரன்களை விளாசி சாதனையைப் படைத்திருந்தார். நல்ல வேளை அந்தச் சாதனையை கிளாசன் முறியடிக்கவில்லை. 5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி இந்த சாத்து சாத்தியது தற்போது இரண்டாவது சாதனையாக மிளிர்கிறது. ஆஸ்திரேலியாவிடம் இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள் என 5 போட்டிகளில் தொடர் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா வீறு கொண்டு எழுந்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக்கி விட்டது.
கிளாசன் - டேவி மில்லர் கூட்டணி 222 ரன்களை ஓவருக்கு 14.47 என்ற ரன் விகிதத்தில் எடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த 200 ரன்கள் கூட்டணியும் செய்யாத தலையாய ரன் விகித சாதனையாகும். அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி 10 ஓவர்களில் 173 ரன்களை இருவரும் குவித்தது உலக சாதனையாகும். ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜோஷ் ஹேசில்வுட் 10 ஓவர் 79 ரன்கள், ஆடம் ஜாம்ப்பா 10 ஓவர்களில் 113 ரன்கள் என்று பவுலிங்கில் சதம் கண்டார். ஆடம் ஜாம்ப்பா மட்டுமே 8 பவுண்டரிகள் 9 சிக்சர்களை கொடுத்தார். 38 பந்துகளில் அரைசதம் கண்ட ஹென்றிக் கிளாசன் அடுத்த 19 பந்துகளில் சதம் கண்டார். இதில் ஸ்டாய்னிஸை ஒரே ஓவரில் 3 பெரிய சிக்சர்கள் விளாசினார். அடுத்த 26 பந்துகளில் 74 ரன்கள் என்று பொங்கி எழுந்தார். முறியடிக்கப்பட்ட சாதனைகள்:
5-ம் நிலை அல்லது அதற்கும் கீழே இறங்கும் டவுன் ஆர்டரில் 174 ரன்கள் என்பது இரண்டாவது சாதனை. முதல் சாதனை இன்னும் நம் கபில்தேவின் 175 ரன்களிடத்தில்தான் உள்ளது. 25 ஓவர்களுக்குப் பிறகு இறங்கி 174 ரன்களை ஒரு தனிப்பட்ட வீரர் அடிப்பது இதுவே முதல்முறை. ஆகவே இதுவும் ஒரு உலக சாதனை. முன்பு ஏ.பி.டிவில்லியர்ஸ் 162 ரன்களை எடுத்துள்ளார். ஜாஸ்பட்லர் நெதர்லாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ளார். ஆனால் கிளாசன் அவற்றை இப்போது முறியடித்து புதிய கொடிநாட்டியுள்ளார்.
14.47 என்ற ரன் ரேட்டில் 200 ரன்களுக்கும் மேலான பார்ட்னர் ஷிப். ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லரின் புதிய உலக சாதனை, இதற்கு முன்பாக ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் சேர்ந்து ஓவருக்கு 10.03 என்ற ரன் ரேட்டில் 204 ரன்களைச் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
ஆடம் ஜாம்ப்பா வாரி வழங்கிய 113 ரன்கள் புதிய ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையாகும். புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியான 434-438 ஸ்கோர் போட்டியில் ஆஸ்திரேலிய பவுலர் மிக் லூயிஸ் 113 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
41-வது ஓவர் முதல் 50-வது ஓவர் வரை 174 ரன்கள் குவிப்பு. இது ஒரு புதிய உலக சாதனை. இதற்கு முன்னர் இங்கிலாந்து எடுத்த 164 ரன்களே சாதனையாக இருந்தது. கிளாசன் 77 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். 2015 உலகக்கோப்பையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 64 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். ஹென்றிக் கிளாசனின் ஸ்கோர் 2வது சிறந்த ஒருநாள் 150 ஆகும்.
5-வது அல்லது அதற்கும் கீழான பார்ட்னர்ஷிப்பில் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முதலாக நடக்கிறது. ஒட்டு மொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் 5-வது விக்கெட்டுக்கான 5-வது உயர்தர பார்ட்னர்ஷிப் ஆகும். ஜேபி டுமினியும், மில்லரும் 2015-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 256 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு அடுத்து இந்த 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் சிறந்தது.
தென் ஆப்பிரிக்கா அடித்த 20 சிக்சர்கள், 2015-ல் மும்பையில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்த போது அடித்த 20 சிக்சர்களுடன் சமன் ஆன சாதனையாகும். 2018-ல் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு நாட்டிங்காம் ஒரு நாள் போட்டியில் 21 சிக்சர்களை வழங்கியது. நேற்று 20 சிக்சர்கள் இரண்டாவது பெரிய சாத்துப்படியாகும். இந்தியாவில்தான் இதுவரை 6 முறை 400க்கும் அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா நேற்று எடுத்த 416 ரன்களுடன் தென் ஆப்பிரிக்க மண்ணில் 7வது 400+ ஸ்கோர் ஆக அமைந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 கிரிக்கெட் தரவரிசை: ரவி பிஷ்னோய் முதலிடம்
வியாழன் 7, டிசம்பர் 2023 10:31:28 AM (IST)

விஜய் ஹசாரே தொடர்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி!
புதன் 6, டிசம்பர் 2023 10:31:46 AM (IST)

இந்தியா டெஸ்ட் தொடர்தான் இங்கிலாந்திற்கு உண்மையான சவால்: மெக்குல்லம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:34:56 PM (IST)

கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!
திங்கள் 4, டிசம்பர் 2023 11:14:11 AM (IST)

முதன்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
சனி 2, டிசம்பர் 2023 4:31:06 PM (IST)

இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!
சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)
