» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்தின் அஜாஸ் படேல் சாதனை

சனி 4, டிசம்பர் 2021 1:11:54 PM (IST)இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் வெள்ளியன்று தொடங்கியது. காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அவர்களுக்குப் பதிலாக விராட் கோலி, சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படுகிறார். நியூசி. அணியில் மிட்செல் இடம்பெற்றுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 120, சஹா 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று ஆட்டம் தொடங்கியவுடன் மீண்டும் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஜாஸ் படேல். மும்பை டெஸ்டில் அவர் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சஹா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்வினை முதல் பந்திலேயே போல்ட் செய்தார் அஜாஸ் படேல். இதனால் 224 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

இதன்பிறகு களமிறங்கிய அக்‌ஷர் படேல், மயங்க் அகர்வாலுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 98 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 306 பந்துகளை எதிர்கொண்டு 146 ரன்களும் அக்‌ஷர் படேல் 98 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து அஜாஸ் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் சிறப்பாக விளையாடி 128 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 8 விக்கெட்டுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அடுத்ததாக ஜெயந்த் யாதவ், 12 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க மும்பை டெஸ்டில் பரபரப்பு ஏற்பட்டது. 9 விக்கெட்டுகளை அவர் எடுத்ததால் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுப்பாரா என கிரிக்கெட் உலகில் ஆர்வம் கிளம்பியது. 

சிராஜ் 4 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளும் அஜாஸ் படேலுக்குக் கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory