» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித் சர்மா அபாரம் : பயிற்சி ஆட்டத்தில் ஆஸியை வீழ்த்தியது இந்தியா!

வியாழன் 21, அக்டோபர் 2021 11:12:56 AM (IST)



ரோஹித் சர்மா, ராகுலின் அதிரடி ஆட்டம், அஸ்வினின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெறவுள்ன. இதில் முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இந்திய அணி, அதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய  அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் 189 என்ற கடின இலக்கை டாப் ஆர்டர் வீரர்கள் கே.எல்.ராகுல், இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று துபாயில் நடைபெற்ற 2வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் டாப் ஆர்டர் அசத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பதவி ஏற்றார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வார்னர் (1), ஃபின்ச் (8), மிட்சல் மார்ஷ் (0) என அடுத்தடுத்து வெளியேறினர். அஸ்வின் 2 விக்கெட்களையும் ஜடேஜா ஒருவிக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.

11 ரன்களுக்குள் 3 விக்கெட்கள் சரிந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை மேக்ஸ்வெல் - ஸ்மித் ஜோடி தூக்கி நிறுத்தியது. 47 பந்துகளை சந்தித்த ஸ்மித் 57 ரன்களும், மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 37 ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ரன்களை விளாச 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் மீண்டும் ஒருமுறை ஓப்பனிங் ஜோடி கலக்கினர். முதல் ஓவர் முதலே ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அதிரடி காட்டினர். 

சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்ந்தது. மறுமுணையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ரிட்டையர்ட் அவுட்டானார்.இதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 38 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 14 ரன்கள் சேர்க்க, 17.5 ஓவர்களிலேயே இந்திய அணி 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளின் வெற்றி மூலம் இந்திய அணி சிறப்பான ஃபார்மில் இருப்பது உறுதி ஆகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory