» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்... வண்ணமயமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

வெள்ளி 23, ஜூலை 2021 5:53:57 PM (IST)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் லேசர் ஜாலங்கள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகிறது.

ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்கியது.  கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து வருகின்றனர்.

இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. வழக்கமாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இந்த தடவை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் சுமார் 1000 மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்கின்றனர்.

ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஆக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory