» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாஹர் அசத்தல் ஆட்டம்: இலங்கை தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணி

புதன் 21, ஜூலை 2021 10:30:01 AM (IST)



இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பு வரை சென்ற போதும், தீபக் சஹாரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

கொழும்புவில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியில் சரித் அஸலங்கா, அவிஷ்கா பொ்ணான்டோ ஆகியோா் அற்புதமாக ஆடி அரைசதம் அடித்தனா். சரித் அஸலங்கா-கருணரத்னே இணைந்து கடைசி 10 ஓவா்களில் 80 ரன்களை விளாசினா். முதல் அரைசதத்துடன் 65 ரன்களை எடுத்திருந்த அஸலங்காவை வெளியேற்றினாா் புவனேஷ்வா். நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 9விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 275 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வா் 3-54, சஹல் 3-50 விக்கெட்டுகளையும், தீபக் சஹாா் 2-53 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இலங்கை அணி நிர்ணயித்த 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தனர். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 13 ரன்களுக்கும், ஷிகர் தவான் 29 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் 1 ரன்னும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 53 ரன்களை விளாசி அவுட்டானார். யாதவின் விக்கெட் வீழ்ந்த பின்னர் இந்திய அணி தோற்பது உறுதி என்ற நிலை உருவானது.

ஆனால் ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தா வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க முடியாமல் திணறிய சூழலில் தீபக் சாஹர் இலங்கை பந்துவீச்சை அசால்டாக கையாண்டார். நிதனமாக ரன்களை உயர்த்திய அவர், 82 பந்துககளை சந்தித்து 69 ரன்களை குவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில், தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அவர் அசத்தினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த புவனேஷ்வர் குமார் 19 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின் இலங்கை மண்ணில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததில்லை எனும் வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது. இலங்கை மண்ணில் நடந்த பகலிரவு ஒருநாள் போட்டியில் சேஸிங் செய்யப்பட்ட 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 9-வது முறையாக ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக 93 ஒருநாள் போட்டிகளில் வென்று ஓர் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணி என்ற வரலாற்றையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தீபக் சஹரும், 9-வது பேட்ஸ்மேனாக வந்த புவனேஷ்வர்குமாரும்தான்.இரு பந்துவீச்சாளர்களும் ஆடி அணியை வெற்றி பெறச் செய்ததைப் பார்த்தபோது, கடந்த 1997ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டைட்டன் கோப்பைதான் நினைவுக்கு வந்தது. பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் ஜவஹல் ஸ்ரீநாத்தும், அனில் கும்ப்ளேயும் சேர்ந்து கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து இந்திய அணியை வெல்ல வைத்தனர். அதேபோன்று தீபக் சஹரும், புவனேஷ்வர் குமாரின் ஆட்டமும் அமைந்தது.

இதில் தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். அவருக்குத் துணையாக ஆடிய புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.உலகக் கோப்பையில் ரவிந்திர ஜடேஜா 77 ரன்கள் சேர்த்ததே இந்திய அணியில் 8-வது வீரராக களமிறங்கி ஒரு வீரர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, அதற்கு அடுத்தார்போல் சஹர் 69 ரன்கள் சேர்த்துள்ளார்

புவனேஷ், சஹர் இருவரும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.ஒரு கட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களும், அதன்பின் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது, ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது. ஆனால், தீபக் சஹர், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து அணியை கட்டிஇழுத்து வெற்றியின் பக்கம் கொண்டு வந்தனர்.

இந்தப் போட்டிக்குமுன் தீபக் சஹரின் அதிகபட்ச ஸ்கோர் என்பது 12 ரன்கள்தான். ஆனால், அணியின் சூழல், வெற்றி தேவை என்ற நெருக்கடி ஆகியவற்றால் தீபக் சஹர் பேட்டிங்கில் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி முதலாவது அரைசதத்தையும் பதிவு செய்துள்ளார். இதற்குமுன் முதல்தரப் போட்டிகளில் தீபக் சஹர் அரைசதங்கள் அடித்திருந்தாலும், சர்வதேச அளவில் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

தீபர் சஹரின் பொறுமையான ஆட்டம், ஷாட்கள், ஸ்லோ பந்துகளை சமாளித்தது என இலங்கை வீரர்களின் பந்துவீச்சை லாவகமாகச் சமாளித்து ஆடியது பாராட்டுக்குரியது. புவனேஷ்வர் குமாரின் அனுபவம், பொறுமை, சஹருக்கு ஒத்துழைத்து ஆடியது வெற்றிக்கு துணையாக அமைந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் ஹசரங்காவுக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஆட்டம் போலவே இருந்தது. மிகக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஹசரங்கா இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினார். பிரித்வி ஷா, தவண், குர்னல் பாண்டியா ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி நெருக்கடி கொடுத்த ஹசரங்காவின் பந்துவீச்சையும் சஹரும், புவனேஷ்வர் குமாரும் சமாளித்து ஆடியது பாராட்டுக்குரியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory