» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2026 தேர்தலில் 100 சதவீத வெற்றி நிச்சயம்: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேச்சு

புதன் 5, நவம்பர் 2025 3:36:26 PM (IST)



இடையூறு அனைத்தையும் தகர்த்தெறிவோம்,  மக்களோடும் கைகோர்த்து 2026 தேர்தலில் 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று த.வெ.க.,  சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேசினார். 

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாள் நாம் இருந்தோம் அப்படிப்பட்ட இந்த சூழலில் நம்முடைய சொந்தங்களின் மனம்பற்றி இருக்க வேண்டியது நம் கடமை அதனால்தான் இவ்வளவு காலம் மௌனம் காத்து வந்தோம்.

அப்படி அமைதியாக இருந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள் ,அர்த்தமற்ற அவதூறுகள், என நம்மை சுற்றி பின்னப்பட்டது பரப்பப்பட்டது. இவற்றை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறிய தான் போகிறோம்.ஆனால் அதற்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு ஒரு நாகரீக பதிலடி கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அரசியல் செய்ய விருப்பம் இல்லை என அடிக்கடி சொல்கின்ற முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்வதன் வாயிலாக பெருந்தன்மையை பெயரளவில் பேசும் முதல்வர், தமிழக சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு வன்மத்தை கக்கி இருக்கிறார்கள் எனவும் எப்படிப்பட்ட அரசியல் என்று தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்.

இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இல்லாத அதிக கட்டுப்பாடு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தது பிரச்சார நேரத்தில் பேருந்துகுள் மட்டும் தான் இருக்க வேண்டும் ,மக்களை பார்த்து கையசைக்க கூடாது ,பேருந்து மேலே ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு அரசியல் காழ்புணர்ச்சியுடன் நேர்மை திறனற்று நம்மை பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட தமிழக முதல்வருக்கு ஒரு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். பொய் மூட்டைகளையும், அவதூர்களையும் அவிழ்த்து விட்ட, கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களுக்கும், கபட நாடக திமுக அரசின் தில்லுமுல்லுகளை தாக்கு பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் நின்றதை மக்கள் அறியாமலா இருப்பார்கள்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அந்த தனிநபர் ஆனையத்தையே அவமதிப்பது போல், அரசு உயர் அதிகாரிகள் காவல் துறை உயர் அதிகாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பு இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது. இப்படி ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள் என இதையும் தமிழக முதல்வர் மறந்துவிட்டாரா.

அதன் பிறகு உச்சநீதி மாற்றம் அந்த தனிநபர் ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் அது வேறு விஷயம். இப்படி கேள்வி கேட்டவுடன் ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என உண்மை நிலையை தெளிவுபடுத்த தான் அப்படி என்று சட்ட ரீதியாகவும் சத்தியத்திற்காகவும் நடந்தது போல ஏதோ சாமர்த்தியமாக பேசுவது போல பேசி இருக்கிறார்கள். இப்படி ஒரு 50 வருடமாக பொது வாழ்க்கையில் இருந்து கொண்டு ஒரு முதல்-அமைச்சர் சொல்வது எவ்வளவு பெரிய வடிகட்டின பொய் எனவும் நான் சொல்லவில்லை உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசியது என்பது பொதுமக்களிடையே நியாயமான விசாரணையை நடக்குமா என சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே இந்த சந்தேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு என கொட்டியதை முதல்வர் அவர்கள் மறந்துவிட்டாரா.

உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தார்களே அதை தமிழக முதல்-அமைச்சர் மறந்துவிட்டாரா. உச்சபட்ச அதிகார மயக்கத்திலிருந்து தமிழக முதல்-அமைச்சர் பேசினாரோ மனிதாபிமானம் அரசியல் அறம் மாண்பு இவை எல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் பேச்சில் மட்டும் பேசிக் கொண்டு அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டார் தமிழக முதல்-அமைச்சர்.

இப்பொழுது நான் கேட்ட கேள்வி அனைத்தும் நான் கேட்கவில்லை உச்ச நீதிமன்றம் கேட்டது. இவையெல்லாம் ஏன் எதற்கு என முதல்வர் அவர்களுக்கு புரிகின்றதா. உச்சநீதிமன்றம் மட்டுமல்ல நிஜத்திலும் மக்களுக்கு தமிழக அரசு மீது இருக்கின்ற நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்து விட்டது இதுவாவது தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு புரியுதா அல்லது புரியவில்லையா அப்படி இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த திமுக தலைமைக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் மக்கள் புரிய வைப்பார்கள்.

அப்பொழுது கூட இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படி என்று. ஒரு அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இப்பொழுதே அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று.

போன பொதுக்குழுவில் என்ன சொன்னேன் அதேதான் மீண்டும் சொல்கிறேன் இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவங்களில் மாபெரும் சக்தியாக நம் கூட நிற்கும் பொழுது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார். அதனால் தோழர்களே நமக்கு வந்திருக்கும் இந்த இடையூறு தற்காலிக இடையூறு மட்டுமே அதனால் அனைத்தையும் தகர்த்தெறிவோம் மக்களோடும் கைகோர்த்து நிற்போம் மக்களுடன் களத்தில் இருப்போம் நம் பயணத்தில் தடம் மாறவே மாட்டோம்.

இப்பொழுதும் சொல்கிறேன் 2026-ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னெற்று திமுக . இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. நூறு சதவீதம் வெற்றி நமக்கே வாகை சூடுவோம் வரலாறு படைப்போம் நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory