» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் : பிப்.24ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

புதன் 12, பிப்ரவரி 2025 11:36:35 AM (IST)

தமிழகத்தில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஆண்டு சுதந்திர தினம் விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலமாக www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுவரை முதல்வர் மருந்தகம் அமைக்க மொத்தமாக 840 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதல்வர் மருந்தகம் அமைக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். ஒருவேளை சொந்த இடமாக இருந்தாலும், அதற்கான சான்றிதழ் மற்றும் சொத்து வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், உரிமையாளர்களிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாகவே முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் 24-ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் கொடுக்கப்படும். அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின் மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இதன்பின் ரூ.1.50 லட்சத்திற்கு மருந்துகள் அளிக்கப்படும். அதேபோல் விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்கள் மூலமாக மக்கள் மருந்துகளை குறைந்த விலையில் வாங்கலாம்.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory