» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமையல் கேஸ் கசிவால் தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!
புதன் 12, பிப்ரவரி 2025 8:45:01 AM (IST)
சென்னையில் சமையல் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் (62). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (56). அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 4-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சமையல் செய்துகொண்டே பூஜையில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சிலிண்டரில் கேஸ் தீர்ந்து, அடுப்பு அணைந்துள்ளது.
உடனடியாக லட்சுமி வீட்டில் இருந்த புதிய சிலிண்டரை மாற்றிவிட்டு மீண்டும் பூஜையை தொடர்ந்துள்ளார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் லட்சுமி, பூஜை செய்வதற்காக சூடத்தை கொளுத்தியபோது, தீப்பிடித்துள்ளது. அவரது சேலையில் பற்றிய தீ உடல் முழுவதும் பரவியது. வலியால் அலறியபடி அங்கும், இங்குமாக ஓடினார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் வீரக்குமார் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.
இதனால் வீரக்குமாரும் தீயில் சிக்கினார். அவர் அணிந்திருந்த லுங்கி மற்றும் சட்டையில் வேகமாக தீ பரவி எரிந்தது. அந்த சமயத்தில், வீட்டுக்கு மருமகன் குணசேகர் வந்திருந்தார். கழிவறையில் இருந்த அவர், வீட்டில் இருந்து புகைமூட்டமாக வருவதை கண்டு வெளியே வந்தார். அப்போது தனது மாமனார்- மாமியார் தீயில் கருகி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
என்ன செய்வது என்று அவர் யோசிப்பதற்குள் அவரும் தீயில் சிக்கி கொண்டார். பின்னர் 3 பேரும் தீயில் கருகி உயிருக்கு போராடினார்கள். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர் 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
80 சதவீத தீக்காயத்துடன் 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி குணசேகர் கடந்த 9-ந்தேதி பலியானார். வீரக்குமார் நேற்று முன்தினம் காலையிலும், அவரது மனைவி லட்சுமி நேற்று மாலையிலும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் வீரக்குமார் மகள் ஆனந்தி (36) உயிர் தப்பி உள்ளார். தீ விபத்தில் பலியான குணசேகரின் மனைவிதான் ஆனந்தி. கொடுங்கையூர் தென்றல் நகரில் வசித்து வந்தனர். குணசேகரனும், ஆனந்தியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கொடுங்கையூரில் இருந்து தினமும் மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துகொண்டு குணசேகரன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
குணசேகரன் வேலை முடிந்த பின்னர், மாமனார் வீரக்குமார் வீட்டில் காத்திருந்து மனைவி வேலை முடிந்ததும் கொடுங்கையூர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். சம்பவம் நடந்த போது மனைவிக்காக காத்திருந்த போது, குணசேகரன் தீயில் சிக்கி பலியாகி இருக்கிறார். சம்பவத்தன்று ஆனந்தி வீட்டில் இல்லாததால் அவர் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
புதன் 26, மார்ச் 2025 10:43:33 AM (IST)

தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை: 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:47:50 PM (IST)

குமரி மாவட்டத்திற்கு ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!
செவ்வாய் 25, மார்ச் 2025 7:43:51 PM (IST)
