» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு : ஆட்சியர் கார்த்திகேயன் பேச்சு

சனி 11, ஜனவரி 2025 5:40:34 PM (IST)



வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், டோனாவூர் ஃபெலோஷிப் அரங்கில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், இன்று (11.01.2025) தொடங்கி வைத்தார்கள்.

இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், தெரிவிக்கையில்:- நூறாண்டுகளுக்கு முன் வனத்தின் இயல்பு தன்மையை மாற்றாமல் அமைக்கப்பட்ட டோனாவூர் ஃபெல்லோஷிப் சிறப்புதன்மை, நவீன காலகட்டத்திலும் சூழலிகளுக்கு உகந்த முறையில் இயங்குவதால், வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நாங்குநேரி வட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 2024-ஆம் ஆண்டு முடிவடைகின்ற பத்தாண்டுகள் தான் வரலாற்றில் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. 

காலநிலை மாற்றம் தீவர மடைந்துள்ளது என வல்லுநர்கள் எச்சரித்து கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. சூழ்நிலைகளின் முக்கியத்துவம் பன்முக தன்மை கொண்ட நாட்டில் இருப்பதால் காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் அதனை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், காலநிலை மாற்றத்தை மீட்டுறுவாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு காலநிலை மாற்றம் காரணமாக மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னி பிணைந்த சவால்களை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டிருந்தது. ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த நல்வாழ்வு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு இந்த மையம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு செயல்படுத்துவதில் வேறு எந்த மாநிலத்தில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாமிரபரணி ஆற்றங்கரைகள் தூய்மைப்படுத்தப்பட்டது. இதனால் பழைய துணிகள், நிலத்தை மாசுப்படுத்தும் பொருட்கள் முதலியவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கொசுக்களை உண்ணும் பூச்சிகளை அழிக்கின்றோம். இதனால் கொசுவின் மூலம் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுகின்றது. உணவு முறைகள், வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில், வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. பல்லுயிர் பெருக்கம் இயற்கையாக கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கின்றது. வளி மண்டலத்தில் நடைபெறும் வேதியியல் மற்றும் நீர் சுழற்சிகளை சமன்படுத்துகிறது. நீரை தூய்மை படுத்துதல்(மீன்கள்) மற்றும் மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து(மண்புழு) வளமான நிலத்தை கொடுக்கிறது. பல்வேறு ஆய்வுகளின் படி இப்படிப்பட்ட இயற்கையான சூழ்நிலையை நம்முடைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் அமைத்து கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகில் பல்வேறு பட்ட உயிரினங்கள் பல்வேறு இடங்களில் அந்த சூழலுக்குகேற்ப கூட்டமாக வாழ்கின்றன. அவ்வாறு கூட்டமாக வாழ்வதற்கு காரணம் கண்டங்கள், கடல்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடாமல் பிரித்து வைக்கப்படுவதால் தான். எனவேதான் இந்த உயிரியல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதுக்கு உலக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

எனவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்க வனம் மற்றும் பல்உயிர்வகை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், பசுமை தமிழ்நாடு இயக்கம், திருப்புடைமருதூர் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை பற்றிய விளக்க படங்கள் ஒளிபரப்பப்பட்டன. மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் நோக்கில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய எவர்சில்வர் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக பசுமை தமிழ்நாடு இயக்கம் பற்றியும் காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வதில் காடுகளின் முக்கியத்துவம் பற்றியும் சூழல் மேம்பாட்டு அலுவலர் திரு அன்பு எடுத்துரைத்தார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் காணப்படும் பல்வேறு வகையான சிறப்பு தாவரங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ATREE அமைப்பின் ஆராய்ச்சியாளர் திரு சரவணன் விளக்கி கூறினார். முல்லைத் திணையில் காணப்படும் பல்வேறு உயிர் பல்வகைமை கூறுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் ரவிச்சந்திரன் விளக்கி கூறினார். 

திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதி எண் சர்வதேச முக்கியத்துவம் பற்றியும் இதில் காணப்படும் சிறப்பு தாவரங்கள் பற்றியும் உயிரிளாளர் ஆக்னஸ் விவரித்தார். திருநெல்வேலி மாவட்ட நீர் நிலைகளில் மட்டும் காணப்படும் அரிய வகை உயிரினமான நீர் நாயின் சிறப்பு தன்மைகள் பற்றியும் அவற்றை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ATREE அமைப்பின் ஆராய்ச்சியாளர் பீட்டர் கிறிஸ்டபர் எடுத்துரைத்தார். தாமிரபரணி நதிக்கரையோர பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவை இனங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஆராய்ச்சியாளர் மதிவாணன் எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கில், தோட்டக்கலைத்துறை வேளாண்துறை, வனத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், நெல்லை மாவட்ட காலநிலை மாற்ற இயக்க குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory