» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஃபென்ஜால் புயல் மழை பாதிப்புகள் : கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு!
சனி 30, நவம்பர் 2024 11:51:34 AM (IST)
சென்னையில் ஃபென்ஜால் புயல் மழை பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் இன்று (நவ. 30) சனிக்கிழமை இரவு அல்லது நாளை (டிச.1) காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவருகிறார். அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி மழை பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட புயல் பாதிப்புக்குள்ளான மாவட்ட ஆட்சியாளர் உடன் ஆலோசனை நடத்தியதாகவும், இன்று இரவு பலத்த மழை பெய்யும் என்பதால் போதுமான முன்னேற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்தி வரவில்லை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.