» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் திடீர் மோதல்: நெல்லையில் பரபரப்பு
சனி 23, நவம்பர் 2024 8:27:57 AM (IST)
நெல்லையில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் வாக்குவாதம்-கைகலப்பு நடந்ததால் பரபரப்பு நிலவியது.
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வு கூட்டம், நெல்லை சந்திப்பு தனியார் மண்டபத்தில் நேற்று காலையில் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அ.தி.மு.க. குறைவாகவே பெற்றுள்ளது. இதற்கு நாம் சரியாக களப்பணியாற்றாததே காரணம்.
கடந்த வாரம் வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை பணி நடந்தபோது, நமது கட்சியில் இருந்து நியமிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் மற்றும் வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இனி நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு முகாமிலாவது நமது கட்சியினர் பங்கேற்று பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
அப்போது மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள், நாங்கள் பூத் வேலையை சரியாகத்தான் செய்தோம் என்று கூறி பாப்புலர் முத்தையாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அ.ம.மு.க.வில் இருந்து வந்தவர்கள் பேச அருகதை கிடையாது என்றனர்.
இதனால் பாப்புலர் முத்தையாவின் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் மேடையில் ஏறினர். அவர்களை கீழே இறங்குமாறு நிர்வாகிகள் கூறினர்.
தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் ஆகியோர் சமரசம் செய்தனர். ‘தகராறு செய்கிறவர்களுக்கும், கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கும் இங்கு இடம் இல்லை, தவறு செய்தவர்கள் குறித்து கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும், எனவே அனைவரும் அமைதியாக இருங்கள்’ என்றனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நமது கட்சி தோல்வி என்பது நெல்லையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதற்காக நிர்வாகிகள் வேலை செய்யவில்லை என்று கூற முடியாது. கட்சியினர் கடினமாக உழைத்தனர்.
தற்போது குற்றம் சாட்டியவர் மாற்றுக்கட்சிக்கு சென்றார் என்று கூற விரும்பவில்லை. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கட்சி பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘அ.தி.மு.க. ஒரு குடும்பம். குடும்பத்தில் சண்டை சச்சரவு இருந்தாலும், அதை பெரிதுபடுத்தாமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது எதிரி தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவையால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்து களப்பணி ஆற்ற வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம். இதற்காக அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், எம்.ஜி.ஆர்.மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் வக்கீல் ஜெயபாலன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் கள ஆய்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மணிகண்டன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
MGR FANSNov 23, 2024 - 09:09:48 AM | Posted IP 162.1*****