» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை!

செவ்வாய் 19, நவம்பர் 2024 12:25:28 PM (IST)

எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், கடந்த 2004 ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம் எஸ் சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மியூசிக் அகாடமியின் வருடாந்த இசை கச்சேரி சீசனில் ஒவ்வொரு ஆண்டும் 'சங்கீத கலாநிதி விருது' வழங்கப்படுவதாகவும், வரும் டிசம்பரில் 98 வது ஆண்டு விழாவில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பாடகர்.டி.எம்.கிருஷ்ணா கூறிவரும் நிலையில் , இந்த அறிவிப்பு சுப்புலட்சுமியின் தங்களது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

பாடகர்.டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை எப்படிக் கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,எம்.எஸ். சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருது வழங்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விருதை டிசம்பரில் நடைபெறும் 98வது ஆண்டு விழாவில், கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் இறை நம்பிக்கை கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை இறை நம்பிக்கை அற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005 ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்குவதாகவும், இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ளார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory