» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுவனை ஓட, ஓட விரட்டி வெட்ட முயன்ற வாலிபர்: மூதாட்டியை கேடயமாக பயன்படுத்தியதால் பரபரப்பு

சனி 16, நவம்பர் 2024 8:48:12 AM (IST)



நெல்லையில் பட்டாசு வெடித்த தகராறில் சிறுவனை ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்ட முயன்றார். மூதாட்டியை கேடயமாக பயன்படுத்திய சிறுவன் அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை டவுன் பகுதியில் கடந்த மாதம் 31-ந்தேதி தீபாவளி அன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்து உள்ளனர். அப்போது 17 வயது வாலிபருக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவில் நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் தெரு பகுதியில் 17 வயது வாலிபர் அரிவாளுடன் 16 வயது சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்ட முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க சிறுவன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி (வயது 70) என்ற மூதாட்டியின் பின்னால் சென்று சிறுவன் பதுங்கினான். அவரை கேடயமாக பிடித்து கொண்ட சிறுவன் தன்னை வாலிபர் வெட்ட விடாமல் பாதுகாத்து கொண்டான். பின்னர் மூதாட்டியை வாலிபர் மீது தள்ளி விட்டு விட்டு சிறுவன் தப்பி ஓடி விட்டான். சிறிது நேரம் கழித்து வாலிபரின் நண்பர்கள் 2 பேர் அங்கு வந்தனர். 

அவர்கள் வாலிபரை சமாதானப்படுத்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது கீழே விழுந்த மூதாட்டி லட்சுமிக்கு கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து, நெல்லை அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மற்ற சிறுவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வாலிபர் அரிவாளுடன் சிறுவனை ஓட ஓட விரட்டி வெட்ட முயன்றது, சிறுவன் மூதாட்டியை கேடயமாக பயன்படுத்தி வாலிபர் மீது தள்ளி விட்டு தப்பி செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் சிறுவனை வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory