» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கணவனை கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சனி 3, ஆகஸ்ட் 2024 5:55:07 PM (IST)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவனைகொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மனைவியை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுலோச்சனா. இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக அவரது கணவர் சந்தேகமடைந்தார். அதனால் மனைவியை கண்டித்துள்ளார். தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2012 நவம்பர் 12ம் தேதி மனைவியிடம் பிராந்தி வாங்கி வருமாறு கணவன் கூறியுள்ளார். உடனே மனைவியும் பிராந்தி வாங்கி கொடுத்துள்ளார். 

அதை அவரது கணவரும், நண்பரும் அருந்தினர். பிராந்தியில் பூச்சி கொல்லி வாசனை தெரிந்ததால் நண்பர் குறைவாக குடித்துள்ளார். ஆனால், சுலோச்சனாவின் கணவர் முழுவதும் குடித்தார். இதனால் அவர் இறந்தார். நண்பர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, சுலோச்சனா மற்றும் அவரது கணவர் சந்தேகப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை கள்ளக்குறிச்சி 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுலோச்சனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜராகி, மனுதாரருக்கும் அவரது கணவருக்கும் இணக்கமான உறவு இல்லை. 

அந்த நிலையில் மனைவியிடம் மது வாங்கி வருமாறு எப்படி கூறியிருக்க முடியும். சுலோச்சனாவுக்கும் அவரது கணவருக்கும் சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதையெல்லாம் விசாரணை நீதிமன்றம் கவனிக்காமல் மனுதாரருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ‘சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி விசாரணை நடத்தியுள்ளர். அவரிடம் சுலோச்சனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவரது உடலில் பூச்சி கொல்லி மருந்து இருந்தது தெரியவந்துள்ளது’ என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இறந்தவருடன் சேர்ந்து மது அருந்தியவரிடம் 13 நாட்கள் கழித்தே போலீசார் விசாரித்துள்ளனர். அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எந்த சான்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சுலோச்சனாவின் 2 குழந்தைகளும் சாட்சியம் அளித்துள்ளனர். அவரின் மூத்த குழந்தைக்கு வயது 11. சம்பவம் நடந்தபோது அந்த குழந்தைக்கு 8 வயதுதான்.

சம்பவம் நடந்தபோது குழந்தைகள் இருவரும் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு சம்பவம் குறித்து தெரியாது. மறுநாள்தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாள் தீபாவளி என்பதாலும், குடும்பத்தில் ஒரு திருமணம் என்பதாலும் ஒரு நாள் கழித்து புகார் கொடுத்ததாக இறந்து போனவரின் சகோதரர் சாட்சியளித்ததை ஏற்க முடியாது.

சகோதரரின் இறப்பைவிட திருமண நிகழ்ச்சியும், தீபாவளியும் முக்கியம் என்பதை ஒருவராலும் ஏற்க முடியாது. மனுதாரரின் கணவருக்கு வீட்டில் மது அருந்தும் பழக்கம் இல்லை என்று சாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மனுதாரருக்கும் விடுதலை செய்யப்பட்டவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறுவதை மனுதாரர் நீதிமன்றத்தில் கடுமையாக எதிர்த்துள்ளார். கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கையை அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை. வீட்டில் பிராந்தி பாட்டிலை கைப்பற்றவில்லை. வீட்டின் அருகில் எடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விஷம் அருந்தியதால்தான் இறந்துள்ளார் என்றாலும் விஷத்தை மனுதாரர்தான் கலந்து கொடுத்தார் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. விடுதலை செய்யப்பட்டவருக்கும் சம்பவத்திற்கும் உள்ள தொடர்பை அரசு தரப்பு எந்த சாட்சிகளாலும் நிரூபிக்கவில்லை. எந்த சாட்சியும் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. எனவே, சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு தந்து அவரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது. தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory