» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது; மக்களை நம்பினேன்‍ ஓ.பன்னீர்செல்வம்

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:34:05 PM (IST)

"உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக் கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

இந்த தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தர்மத்தை நம்பினேன்; நீதிமன்றங்களை நம்பினேன்; அதிமுகவை உயிராக நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்.

இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.

அதிமுக நிறுவனர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே"

என்னும் எம்.ஜி.ஆரின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்.

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.
அண்ணா நாமம் வாழ்க!
எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!
ஜெயலிலதாக நாம் வாழ்க!" என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிAug 23, 2022 - 12:09:32 PM | Posted IP 162.1*****

கருமயுத்தம் செய்யும்போது கட்சி தொண்டர்களை காப்பாத்தவந்த தூதன்போல பில்டப் காட்டினார். கடைசியில் துணைமுதல்வர் பதவியை தனக்கு வாங்கிவிட்டு அனைவரையும் நட்டாற்றில் விட்டு சென்றுவிட்டார். இன்றைக்கு ஒற்றுமையை பற்றி தொண்டர்களுக்கு பாடம் எடுக்கிறார். இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா?

MGR FOLLOWERAug 22, 2022 - 04:03:08 PM | Posted IP 162.1*****

MGR சினிமா பாடல்களை சொன்னால் போதாது. அவர் போல நேர்மையாக நடக்கவேண்டும். உங்களுக்கு அந்த தகுதி கிடையாது. பதவி கிடைக்கும் பக்கம் தாவி விடுவீர்கள். Also No administration knowledge. EPS தலைமையில் ADMK இருந்தால்தான் கட்சிக்கு நல்லது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory