» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினி காந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? : ப. சிதம்பரம் கேள்வி

சனி 13, ஆகஸ்ட் 2022 4:05:42 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து, அரசியல் பேசியதாக தெரிவித்திருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது எம்.பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  செட்டிநாடு வேளாண்மை கல்லூரியில் இந்த ஆண்டு 47 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 60 மாணவர்கள் வரை உயரும் என்று நம்புகிறேன். வேளாண்மை கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அதில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலம் அறிந்தேன். 

இந்த ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்குரிய இடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று காரைக்குடி சட்டக் கல்லூரிக்கான கட்டடம் அமைவதற்கு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்திருக்கிறேன். விரைவில் அதற்கும் கட்டடம் கட்டும் பணி தொடங்கும். அதற்கும் வகுப்புகள் நடத்துவதற்கும் தொடர்பில்லை. வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட நூலகங்களுக்காக எனது எம்.பி நிதியிலிருந்து ரூ.55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அரியக்குடி உள்ள பள்ளியில் மேம்படுத்தப்பட்ட நூலகம் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதிகளில் அரசு பள்ளிகள் சீரமைப்பு, சிவகங்கையில் அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் என ரூ.1.13 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளிகளில் நவீன வகுப்புகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்த யோசனையை ஏற்று அதற்குரிய பட்டியல் தயாரிக்கப்பட்டு விரைவில் அதற்கான நடவடிக்களை தொடங்கும். 

ஒரே நாடு ஒரே ரேசன் என்று சொல்வதெல்லாம் தவறான எண்ணம். காங்கிரஸ் கட்சி இதனை பல முறை எச்சரித்து வருகிறது. ஒரு நாட்டுக்குள்ளே பல மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையீடு கூடாது. 75 ஆண்டுகள் சுதந்திரம் நிலைத்திருப்பதை வரவேற்கிறேன், மகிழ்கிறேன், பாராட்டுகிறேன். இதற்கு அடித்தளமிட்டவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதை மறந்துவிடக்கூடாது. 

இன்றைக்கு நாட்டில் வேலையில்லாமை மிக கொடுமையான நிலையில் இருக்கிறது. மொத்த வேலையில்லாமை என்பது 7 முதல் 8 சதவீதமாகும். 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இளைஞர்களுக்கு வேலையில்லாமை 25 சதவீதமாகும். அதற்காக எஞ்சிய 75 சதவீதம் பேர் வேலையில் இருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். பல பேர் வேலைக்கே போவது கிடையாது. வேலை தேடுவது கிடையாது. வேலை கிடைக்காது என வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆகவே வேலைவாய்ப்பை குறைந்த புள்ளிவிபரங்களாக காட்டுகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது ஒரு விவாதப்பொருளே அல்ல. அவர் நாட்டின் குடிமகன் ஆளுநரை சந்தித்திருக்கிறார். அவர்கள் அரசியல் பேசியதாகத்தானே தெரிவித்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. 

நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. நிதி பற்றாக்குறை, நடப்புக்கணக்கு பற்றாக்குறை, கடன் சுமை, பண வீக்கம் இந்த நான்கும் மத்திய அரசு அதிகார வரம்புக்குள் அடங்கிய பொருள்கள். இதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன. இதனை நிர்வகிப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்திருக்கிறது. அதன் விளைவுதான் விலைவாசி ஏற்றம், மோசமான வளர்ச்சி விகிதங்கள். 

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலே நிர்வாகக் குழு கூடி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். போதைப் பொருள்கள் ஒழிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மதுபானத்தை தடை செய்யவேண்டும் என்பது பல ஆண்டுகளாக இருந்துவரும் சர்ச்சை. போதைப் பொருளுக்கும் மதுவுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. 

மத்திய அரசு கருப்புப்பணம் இனி இருக்காது என்று கூறி பண மதிப்பிழப்பு செய்தனர். ஆனால் நாள்தோறும் கோடிக்கணக்கில் வருமான வரித்துறை பிடிப்பதெல்லாம் என வெள்ளையாக்கப்பட்ட பணமா? என்றார் ப. சிதம்பரம்.  இப்பேட்டியின் போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ஆனந்தன்Aug 13, 2022 - 07:51:35 PM | Posted IP 162.1*****

காங்கிரஸ் இந்த முட்டாளத்தான் நிதி அமைச்சர் பதவி கொடுத்து கெட்டு போனது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory