» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிலத்தில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாய் வெடித்து சிதறியது ... கோவை அருகே பரபரப்பு!

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 3:41:05 PM (IST)



கோவை அருகே நிலத்தில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாய் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழாய் அருகில் இருந்த மண் மற்றும் கற்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு 70 அடி உயரத்திற்கு மேலே பறந்தது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.2 ஆயிரத்து 998 கோடி செலவில் 9.12 லட்சம் வீடுகளுக்கு சமையல் கியாஸ் விலை வழங்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீத்தேன் என்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கொச்சியில் இருந்து குழாய் மூலம் கோவை அருகே உள்ள பிச்சனூர் என்ற இடத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, மீண்டும் குழாய் மூலம் கோவை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்பட உள்ளது.

தெருவுக்கு, தெரு குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் குடிநீர் இணைப்பு கொடுப்பது போல் மீத்தேன் சமையல் கியாஸ் வீடுகள் தோறும் இணைப்பு கொடுக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக கோவை மாநகரில் ஒரு அடி விட்டமுள்ள இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் சாலையிலும் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு குழாய்கள் சாலையில் குழி தோண்டப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு பதிக்கப்பட்ட குழாய்களை நேற்று சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இதற்காக 4 கிலோமீட்டர் தூரம் பூமியில் பதிக்கப்பட்ட இரும்பு குழாயில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மற்றும் அதிக விசையுடன் காற்று கம்பரசர் மூலம் செலுத்தப்பட்டது. அந்த தண்ணீர் குழாயின் உள்பகுதியில் சுத்தப்படுத்தி தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள ரெயில்வே கேட் முன்பு உள்ள பகுதியில் மெதுவாக வெளியே வர வேண்டும்.

ஆனால் ஊழியர்கள் வழக்கத்தை விட காற்றை அதிக அழுத்தத்துடன், செலுத்தியதால் மறுமுனையில் பதிக்கப்பட்ட குழாய் வழியே காற்றும், தண்ணீரும் அதிக அழுத்தத்துடன் வெளியேற தொடங்கியது. அப்போது பயங்கர சத்தத்துடன் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெடித்து சிதறியது.

இதில் குழாய் அருகில் இருந்த மண் மற்றும் கற்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு 70 அடி உயரத்திற்கு மேலே பறந்தது. இதனால் அங்கு நின்றிருந்த பலரும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது 5 நிமிடம் வரை நீடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது.

ஆனால் அந்த பகுதி மக்களிடையே எரிவாயு குழாயில் செலுத்தப்பட்ட கியாஸ் தான் அழுத்தம் தாங்காமல் வெடித்து விட்டதாக தகவல் பரவே அந்த பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவன இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தகவல் கிடைத்து கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். 

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் பல இடங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அந்த குழாய்களில் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அது போன்று தான் தண்ணீர் பந்தல் பகுதியிலும் சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது. பணியின் போது, குழாயில் கம்ப்ரசர் மூலம் செலுத்தப்பட்ட காற்றின் அளவு வழக்கத்தை விட அதிகமாகி விட்டது. அதனால் மறுமுனையில், அது பீறிட்டு வெளியேறியது. மற்றபடி குழாய் உடைப்போ, எரிவாயு கசிவோ ஏற்படவில்லை. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பூமியில் பதித்த குழாய்களில் இணைப்புகள் அனைத்தும் வெல்டிங் செய்யப்பட்டவை. இவற்றில் சி.என்.ஜி. செலுத்தும் முன்னர் 3 முறை சுத்தம் செய்யப்படும். 2 முறை நீருடன் காற்றை செலுத்தியும், ஒரு முறை நைட்ரஜன் செலுத்தியும் சுத்தம் செய்யப்படும். நைட்ரஜன் வாயு குழாய் உள்புறத்தில் தண்ணீர் மற்றும் வேதி பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory