» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை தீர்மானம்: அன்புமணி வலியுறுத்தல்!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 5:04:07 PM (IST)

கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மது விலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராம சபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்.

தமிழ்நாட்டை இன்று பீடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான். இரு சமூகக்கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்பு கொண்டாலும் கூட, ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும் தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான் செல்கிறது.

மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15-ந் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மது விலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராம சபைக் கூட்டங்களில் பா.ம.க.வினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory