» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் : மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

சனி 4, டிசம்பர் 2021 4:04:43 PM (IST)



கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கமல்ஹாசன், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் கரோனா தொற்று பாதிப்பின் அறிகுறியால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்ததால் லேசான பாதிப்பு இருந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் விரைவில் குணமடைந்து நோயின் தீவிரத் தன்மையிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில நாட்கள் ஓய்வில் இருந்து வந்தார்.

அவர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். காணொலி மூலம் ரசிகர்கள் முன் தோன்றி உரையாடினார். இந்நிலையில் ஓய்வு முடிந்து பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் இன்று (4-ந் தேதி) தன் வழக்கமான பணிகளைச் செய்ய மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்டார். அதன்படி இன்று மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரசிகர்கள் பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றிகள்! 

முன்னதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்னுயிரே... என்னுறவே... என் தமிழே... மருத்துவமனை வாசம் முடிந்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், என் மகள்களுக்கும் ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அண்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலவைர்களுக்கும் என் நன்றிகள். 

என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீபிரியா, உள்ளிட்ட திரைத்துறை ஊடகவியலாளருக்கும் என் நன்றிகள். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும் விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள். 

நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலையங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும் நேர்த்திக்கடன் செய்தும், அன்ன தானம், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory