» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வெள்ளி 26, நவம்பர் 2021 4:51:46 PM (IST)

தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: "குமரிக் கடல் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமக 3 இடங்களில் அதி கனமழையும், 4 இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

27-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், புதுவை, காரைக்கால் பகுதியில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. மீனவர்கள் 26, 27-ம் தேதிகளில் (அதாவது இன்றும் நாளையும்) குமரி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரை 58 செ.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 70% அதிகமாகப் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழைப் பொழிவு 96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 67% அதிகம் பதிவாகியுள்ளது." இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory