» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பக்கோடாவில் பல்லி: கடையில் அதிகாரிகள் ஆய்வு; தின்பண்டங்கள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

புதன் 27, அக்டோபர் 2021 12:11:46 PM (IST)நெல்லையில் பிரபல ஸ்வீட் கடையில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் என்ற கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று நெல்லையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அதனை பிரித்து பாத்திரத்தில் தட்டிய போது அதில் எண்ணெயில் பொறிந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்-அப் மூலமாக புகார் அளித்தார். 

இதையடுத்து சென்னை உணவு பாதுகாப்பு துறையினர், நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர். உடனடியாக நெல்லை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது கடையில் உணவு பண்டங்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. அதற்கான ‌ஷட்டர்களை சரி செய்து மூடி வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

தொடர்ந்து பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டிருந்த குலோப் ஜாம் உள்ளிட்ட தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் பிளாஸ்டிக் டப்பாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிடுமாறு கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரி உள்ளிட்ட தின்பண்டங்களை எடுத்து ஆய்வுக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கடைக்கு எதிரே அமைந்துள்ள மற்றொரு கிளையினையும் ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இன்று காலை அந்த கடையிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு இருந்த தின்பண்டங்களும் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் தெரிவதற்கு 20 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கடையை 24 மணி நேரம் அடைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory