» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பண்டிகைக்குப் பிறகு கரோனா உயராமல் இருக்க நடவடிக்கை : ஓபிஎஸ் வலியுறுத்தல்!

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:48:45 AM (IST)

பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்க நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து கரோனா தொற்று நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதன் காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், எந்த கட்டுப்பாட்டினையும் பின்பற்றாத சூழ்நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது என்பதுதான் யதார்த்த நிலை.

ஜவுளிக்கடைகளிலும், இனிப்பு கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கும்போது தீபாவளிப் பண்டிகையை விமரிசையாக மக்கள் கொண்டாட முடிவெடுத்து விட்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும், அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

துர்கா பூஜை, நவராத்திரி விழா போன்ற பண்டிகைகளுக்குப் பிறகு மேற்கு வங்காளம், அசாம், இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாகவும், உயர்வு பெரிய அளவுக்கு இல்லை என்றாலும், பண்டிகைக்கு முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும்போது, மேற்கு வங்காளத்தில் 10 சதவீதத்துக்கு மேற்பட்டோரும், அசாமில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோரும், இமாச்சலப்பிரதேசத்தில் 38 சதவீதத்திற்கு மேற்பட்டோரும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாக செய்திகள் வருவதை இந்த தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுமட்டுமல்லாமல், கரோனா நோய் தொற்று ஆரம்பிக்கப்பட்ட சீனாவில் தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற சூழ்நிலையில், சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் புத்தாடைகள் வாங்கிச் செல்ல காலை முதலே பொதுமக்கள் வருவதையும், நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும், ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததையும், அரசால் இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவை பின்பற்றாதையும் காண முடிகிறது.

இந்த நிலை தான் பிற மாவட்டங்களிலும் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற நிலைமை கரோனா நோய் தொற்றின் தாக்கத்தை அதிகரிக்க வழி வகுத்து விடும். கரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், இந்த தொற்று முற்றிலும் உலகத்தை விட்டு விரட்டப்படும் வரையில், பாகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியதும், பண்டிகைக் காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும், ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கவும், பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு கரோனா தொற்றின் தாக்கம் பண்டிகைக்கு பிறகு தமிழ்நாட்டில் உயராமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory