» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் தனி நபர்கள் யானை வைத்திருக்க அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:38:52 PM (IST)

தமிழகத்தில் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானையை வைத்து சர்க்கஸ் காட்டுவது, யானையை ஆசிர்வதிக்க வைத்து பணம் பெறுவது, செல்வந்தர்கள் வீட்டு விழாக்களில் விருந்தினர்களை வரவேற்க கால் கடுக்க யானையை நிற்க வைப்பது என யானை மூலம் தமிழகத்தில் பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளம். சிலர் யானையை சொந்தமாக பராமரிக்கின்றனர், சிலர் கேரளாவில் இருந்து வாடகைக்கு யானையை அழைத்து வந்து பிழைப்பு பார்க்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. இதனிடையே இவ்வழக்கின் பின்னணியை பார்க்கலாம்.

கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கோவில் யானைகள் எத்தனை உள்ளன, வளர்ப்பு யானைகள் எத்தனை உள்ளன, வனத்துறை யானைகளின் எண்ணிக்கை என்ன, என்ற விவரத்தை தாக்கல் செய்ய ஆணையிட்டிருந்தது. மேலும், மற்றும் யானைகளின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள், அரசுக்கு உத்தரவிட்டனர்.

யானைகள் நலன் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாயில்லா ஜீவன் என்று கூட பாராமல் யானைகளை வைத்து காசு பார்த்து வந்தவர்களுக்கு இந்த உத்தரவு சம்மட்டி அடி போல் அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory