» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி 22¼ பவுன் நகை மோசடி : போலி பெண் மந்திரவாதி கைது

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:30:31 AM (IST)

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 22¼ பவுன் நகையை அபகரித்த போலி பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளார். 

மேலும் அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு சம்பந்தப்பட்ட பெண் அதிர்ச்சி அடைந்தார். எனவே தோஷத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? என்று சுஜிதாவிடம் கேட்டுள்ளார். மேலும், தோஷத்துக்கு பரிகாரமாக நான் எதை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுஜிதா சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்த நகையை கேட்டுள்ளார். 

மாங்கல்ய தோஷம் என்று கூறியதால் தனது கணவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று நினைத்த அந்த பெண் முதலில் தன்னிடம் இருந்த நகையை கொஞ்சம் சுஜிதாவிடம் கொடுத்துள்ளார்.  பின்னர் பூஜை, வேண்டுதல் என்று கூறி கடந்த 8 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை சுஜிதா அபகரித்து இருக்கிறார். அதிலும் கடைசியாக 8 பவுன் கவரிங் நகையை கொடுத்து விட்டு, அந்த பெண்ணிடம் இருந்து ஒரிஜினல் நகையை சுஜிதா வாங்கியதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த விவகாரத்தை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். இவ்வாறு மொத்தம் 22¼ பவுன் நகையை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து சுஜிதா வாங்கி அபகரித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் நகையை அவருடைய கணவர் கேட்டுள்ளார். அப்போது தான் நகையை சுஜிதா அபகரித்த விவரம் தெரியவந்தது. பின்னர் இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுஜிதா போலி மந்திரவாதி என்பது தெரிய வந்தது.

 மாங்கல்ய தோஷம் இருப்பதாக ஏமாற்றி பெண்ணிடம் இருந்து 22¼ பவுன் நகையையும் அவர் அபகரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலையில் சுஜிதாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் அபகரித்த 22¼ பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சுஜிதா இதே போல மேலும் பலரை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை அபகரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து

adminSep 24, 2021 - 04:26:04 PM | Posted IP 89.38*****

fun pandrom guys

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory