» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதி!- சீமான் கண்டனம்

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:46:49 PM (IST)

முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 40 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பங்குபெறமுடியும் என்ற தேர்வு வாரியத்தின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இணையவழியில் நடைபெறவுள்ள போட்டித்தேர்வில் 40 வயதைக் கடந்த பட்டதாரிகள் பங்கேற்க முடியாது எனும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் பல இலட்சக்கணக்கானவர்களின் இலட்சியக் கனவினை கானல் நீராக்கியுள்ள தமிழ்நாடு அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அன்றைய அதிமுக அரசு முதுநிலை ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயித்து அரசாணை வெளியிட்டபோதே, அது முதுநிலைப்பட்டதாரிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பினையும் ஏற்படுத்தியது. நடைமுறைக்கு ஒவ்வாத அரசின் அறிவிப்பினால் ஏற்படும் பாதிப்பினை உணர்ந்தே, நாம் தமிழர் கட்சியும் தொடக்கத்திலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘இது தொடக்கக்கல்வித்துறையை மூடி பள்ளிக்கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணை’ எனக்காட்டமாக விமர்சித்துவிட்டு, தேர்தலில் வென்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு அதே அரசாணையை நிறைவேற்ற முனையும் திமுக அரசின் செயல் நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

ஆசிரியராகப் பணிபுரிவதையே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு, அதற்கான போட்டித் தேர்வில் வெற்றிபெற பல ஆண்டுகள் இரவும், பகலுமாகக் கடும் உழைப்பினை செலுத்தி முயற்சித்துகொண்டிருக்கும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, அவர்களது வாழ்வினை இருளில் தள்ளியுள்ளது ஆளும் திமுக அரசின் இந்நடவடிக்கை. ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வென்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படாமல் ஐந்தாண்டுகள், எட்டு ஆண்டுகள் என நீண்டகால இடைவெளிகளிலேயே தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. 

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இத்தகைய அறிவிப்பால் 35 வயதைக் கடந்த பட்டதாரிகள் போட்டித்தேர்வில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளே கிடைக்காமல் போகும் ஆபத்துண்டு. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வுகளில் பங்கேற்க எவ்வித வயதுவரம்பு தடையும் இல்லாது, 58 வயதுவரை தேர்வினை எழுத வாய்ப்பிருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இத்தகைய மோசடித்தானமான அறிவிப்பினை வெளியிட்டிருப்பது மிகப்பெரும் சமூக நீதியாகும். 40 வயதுக்கு மேல் ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாதென்றால், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற வெற்று நடைமுறை எதற்காக? யாரை ஏமாற்ற? பதில் சொல்வார்களா ஆட்சியாளர்கள்?

கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றி வரும் திமுக அரசு, தற்போது அறப்பணியான ஆசிரியர் பணியில் தாங்கள் பெற்ற பணியனுபவத்தை அரசுப்பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென்று இறுதிவரை போராடும் ஆசிரியர் பெருமக்களின் தியாக உணர்வினை சிறிதும் மதியாது கொச்சைப்படுத்தும்விதமாக, அவர்களை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதவே தகுதியற்றவர்கள் என்று முறையற்ற வகையில் முத்திரை குத்தும் எதேச்சதிகார அரசாணையை வேகவேகமாகச் செயல்படுத்த முயல்வது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கோரச்செயலாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்பதற்கான வயதுவரம்பு கட்டுப்பாட்டினை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இத்தோடு, தங்களின் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி முதுநிலைப்பட்டதாரிகள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்குமெனவும் இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory