» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ரூ.1 கோடியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்!

சனி 31, ஜூலை 2021 4:30:44 PM (IST)



நெல்லையில் ரூ.1 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலகக் கட்டடத்தை தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3282 சதுர அடி பரப்பளவில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (31.7.2021) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில்  உள்ள  38 மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் 3282 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடம், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம், இளம் சிறார்களுக்கான காதுகேளாதோர் பயிற்சி மையம், உதவி உபகரணங்கள் வழங்கும் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம், சிறப்புக் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள்        கலந்துகொண்டனர்.

இதுபோல் பாளையங்கோட்டை, மதுரையில் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 70.75 இலட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை இரயில் நிலையம் அருகில் 86.35 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.7.2021) தலைமைச் செயலகத்தில்,  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 

தமிழகத்தில் சுமார் 1,27,000 முன்னாள் படைவீரர்கள், 56,000 கைம்பெண்கள்  மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் உள்ளனர்.  இவர்களின் நலனுக்காகத் தமிழ்நாடு அரசு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் நலன் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடம்  கட்டிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 3002 சதுர அடியில் 70.75 இலட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை இரயில் நிலையம் அருகில் 2550 சதுர அடியில் 86.35 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுத்துறைச் செயலாளர் டாக்டர் டி. ஜகந்நாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory