» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுக் கடைகளை மூடக்கோரி போராடிய நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் மீது வழக்கு: சீமான் கண்டனம்!

சனி 19, ஜூன் 2021 5:42:56 PM (IST)

மதுரையில் மதுக் கடைகளை மூடக்கோரி போராடிய நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பதற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள இப்பேரிடர் காலத்தில் மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி வெற்றிக்குமரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இத்தகைய அடக்குமுறைகள் மூலம் மண்ணுக்கும் மக்களுக்குமானப் போராட்டக் களத்தில் ஓங்கி ஒலிக்கும் நாம் தமிழர் உறவுகளின் குரலை முடக்கிவிடலாம் எனும் திமுக அரசின் வெறுங்கனவு ஒருபோதும் நிறைவேறாது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனா பரவலைக் காரணம்காட்டி, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடிய ஸ்டாலின் அவர்கள், தற்போது முதல்வரானதும் அதிமுக-வின் அடியொற்றி மதுபானக் கடைகள் திறப்பதும், அதற்கு எதிராகப் போராடிய நாம் தமிழர் உறவுகள் மீதும் பொய் வழக்குத் தொடுப்பதும் மக்கள் விரோத அரசியல் போக்காகும்.

மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அனைவரையும் ஏற்க செய்யும் பொருட்டு அறவழியில் போராடுபவர்கள் மீது வழக்கு தொடுத்து அச்சுறுத்தி அடக்குமுறைக்குள்ளாக்குவது சனநாயகத்திற்கு எதிரானது. ஆகவே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி போராடிய நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக நாடெங்கிலும் எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரையாவது மதுபானக்கடைகள் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory