» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் : அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

திங்கள் 26, ஏப்ரல் 2021 12:35:05 PM (IST)

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால், அவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரமமில்லாமல் சுவாசிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் செயற்கையாக அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடியில் அடைக்கப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், எங்களுக்கு அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே  கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார். 

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலையை திறந்து அங்கு தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் . ஆக்சிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று தி.மு.க கனிமொழி கூறினார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் ஆதரவு தெரிவித்தார்.முத்தரசன் கூறும் போது தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்க கூடாது.  மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என கூறினார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான். நாளுக்கு நாள் கரோனா அதிகரிக்கிறது, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என கூறினார்.ஆக்சிஜன் தயாரிக்க   ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறக்க அனுமதி அளிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி தேவைப்பட்டால் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு கூறி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thalir Products
Thoothukudi Business Directory